தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே .பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசு கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.
அதே நேரத்தில், அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்டெடுத்தும், தொழில் வளத்தைப் பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
மத்திய அரசு, இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.5.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேசன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் கட்டடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு அரிசி போன்ற பொருட்களை கூடுதலாக வழங்கியும், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரிய தொழிலாளர்களை சேர்த்து 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தலா ஆயிரம் ரூபாய் வழங்கியதைப் போல், மீண்டும் தலா ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையில், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-
• வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
• நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
• தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை. எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
• வணிக வளாகங்கள்
• பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் திறக்க தடை. எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றலை தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம்.
• மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
• மெட்ரோ ரயில் , மின்சார ரயில்.
• திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் , பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
• அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
• மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.
இந்த கட்டுப்பாடுகளில் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.
• இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
• திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
பொது பேருந்து போக்குவரத்து :
மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது
மண்டலம் 1 கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம் 2 தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3 விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
மண்டலம் 4 நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலுர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
மண்டலம்5 திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மண்டலம் 6 தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7 காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8 சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி
மண்டலம் 7-இல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் 8-இல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள்ளும் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கிறது
• அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
• பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
• மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.
• அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.
• அரசால் தனியாக வெளியிடப்படவுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.
இ-பாஸ் முறை :
• அனைத்து வகையான வாகனங்களும் அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.
• வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அதில் கூறியுள்ளார்.