சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், அரசு உடனடியாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மதுக்கடைகளை மூட வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக புதுச்சேரியில் மதுக்கடைகளை மூடும்படி அம்மாநில அரசு ஆணையிட்டிருக்கிறது. நோய்த் தொற்றுக்கு மதுக்கடைகள் முக்கியக் காரணமாக உள்ள நிலையில், அவற்றை மூட ஆணையிட்டது மிகச்சிறந்த நடவடிக்கையாகும்.
புதுச்சேரி அரசு மது வணிகம் மூலமாகவே பெருமளவில் வருவாய் பெறுகிறது. மதுக்கடை வருமானம் இல்லாவிட்டால் அரசு நிர்வாகத்தை நடத்துவதே பெரும் சவாலாக இருக்கும் என்றாலும் கூட, அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூடியிருப்பது துணிச்சலான நடவடிக்கை. அதேபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிலும் எடுக்கப்பட வேண்டும். இது தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த அரசு, அவற்றால் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், முடி திருத்தும் நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றை மூடுவதற்கும் ஆணையிட்டிருக்கிறது. ஆனால், பலமுறை வலியுறுத்தியும் மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
உடற்பயிற்சிக் கூடங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் பரவும் வைரஸ் மதுக்கடைகளில் மட்டும் பரவாது என்று அரசு கருதினால் அது சரியல்ல. மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக மாலை நேரங்களில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். அதனால் மது அருந்துபவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்ற உலக சுகாதார நிறுவனம், மது அருந்துவதற்கான வாய்ப்புகளையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரையைக் கூட மதிக்காமல் மதுக்கடைகளை தொடர்ந்து திறப்பது கரோனா மேலும் பரவுவதற்கே வழி வகுக்கும்.
அதுமட்டுமின்றி, கரோனா காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகக் குறைந்து விட்டது. இத்தகைய சூழலில் மதுக்கடைகள் திறந்திருந்தால், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளில் ஒரு வேளை உணவுக்காக வைத்திருக்கும் பணத்தைக் கூட எடுத்து வந்து மது குடிப்பார்கள். அதனால் ஏழைக் குடும்பங்களில் தினமும் சண்டையும், அமைதியின்மையும் குடி கொண்டு விடும்.
அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும். அதன்மூலம் நோய்த்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமின்றி, ஏழைகள் வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக குடிகொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.