சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த ஈ.வே.ரா இறந்ததை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்தது. இதில், சுயேச்சைகள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக தேர்தல் களத்தில் இறங்கி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதனை தவிர கட்சிகளின் மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் ஆதரவாளர்களுடன் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் ஒன்றுகூடிய நிலையில் தேர்தல் பரப்புரை மட்டுமல்ல, டாஸ்மாக் விற்பனையும் சூடுபிடித்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மதுக் கடைகள் உள்ளன. தேர்தல் பரப்புரை கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து காணப்படுகின்றனர். இதனால், ஈரோடு மாவட்டத்தில் மது விற்பனை களைகட்டி வருகிறது. டாஸ்மாக் விற்பனையும் வழக்கத்தை விட, அதாவது 30 விழுக்காடு, விற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஒரு முக்கிய கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகி கூறுகையில், "டாஸ்மாக் விற்பனை ஈரோடு மாவட்டம் முழுவதுமாக அதிகமாக இல்லாவிட்டாலும், ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் பவானி தொகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிகமான கூட்டம் காணப்படுகிறது. ஏனெனில் கட்சிகளின் நிர்வாகிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வருகை தந்து ஆங்காங்கே முகாமிட்டுள்ளனர்.
மேலும் பரப்புரைக்கு தங்களது பலத்தைக் காட்ட அதிகமான தொண்டர்களை அழைத்து வர செலவு செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலான தொண்டர்கள், வாக்காளர்கள் மது பாட்டில்களை விரும்புவதால் அவர்களுக்கு பெட்டி பெட்டியாக மதுபானம் வாங்க வேண்டியுள்ளது" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் பரப்புரை உச்சகட்டம் அடையும் வரை டாஸ்மாக் கடைகளில் அமோக வியாபாரம் நடக்கும்” என்றார்.
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு மது விநியோகம் செய்வதைத் தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டாலும், தொடர்ந்து இந்த செயல்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. தேர்தல் காலங்களில் வாக்காளர்களைக் கவர பணத்துடன், மது பாட்டில்களும் ரகசியமாக விநியோகிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.
இதையும் படிங்க: ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகல்!