சென்னை: ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்பு நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம், குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மானியத்தில் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியது. இது குறித்து சமீபத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை. மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் என்பது தொடரும்" என விளக்கமளித்தார்.
இதன் மூலமாக ஒரே வளாகத்தில் அதிக இணைப்பு வைத்திருப்பவர்கள், வாடகை இருப்பவர்களிடம் மின்சாரத்துக்காக அதிக கட்டணம் வசூலிக்கும் உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்படும். இதனால் நுகர்வோருக்கு எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது என கூறப்படுகிறது. மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தமிழ்நாடு அரசால் காலகெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் விரைந்து இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இனிவரும் காலங்களில் மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருந்தால் மட்டுமே ஆன்லைனில் கட்டணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவை அரசிடமிருந்து எந்தவிதமான மானியமும் பெறுவதில்லை. அதனால் அவர்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய தேவையில்லை எனவும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக மோசடிகள் தவிர்க்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்