சென்னை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.ஆர். கோகுலகிருஷ்ணன். இவர், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கொடைக்கானல் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான 1.85 ஏக்கர் நிலம் அப்போதைய குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநராக பணியாற்றிய அதிகாரி அம்பலவாணன் என்பவர் பினாமிகள் மூலம் வாங்கியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொநல வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வனத்துறைக்குச் சொந்தமான அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த உத்தரவிட்டது. இந்த முறைகேட்டுக்கு அப்போதைய வத்தலக்குண்டு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். இதற்காக போலி வில்லங்க சான்றிதழ்களும் தயாரிக்கப்பட்டன. இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அம்பலவாணனின் தூண்டுதலின் பேரில் சிலர் என்மீது பொய்யான புகார் கொடுத்து வருகிறார்கள். அந்த புகார்களின் மீது எனக்கு தாண்டிக்குடி காவல் துறையினர் சம்மன் அனுப்பினர். எனக்கு மிரட்டல்களும் வருகின்றன.
எனவே எனக்கு காவல் துறையினர் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் ஆட்சியர், மாவட்ட டிஎஸ்பி, தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் ஆகியோர் இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆசிரம வழக்கில் கைதான 8 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி!