ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தி மோசடி செய்த ஈரோடு மாவட்டம், கம்புலியான் பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை அலுவலர் விஸ்வநாதனை, தனபால் என்ற இளைஞர் இரும்பு தடியால் அடித்து கொலை செய்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பெருந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஈரோடு கூடுதல் அமர்வு நீதிமன்றம், தனபாலுக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்ய கோரி தனபால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு, நேரடி சாட்சிகள் ஏதுமில்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்த வழக்கு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
மேலும் தனபால் தனக்கு வேலை வாங்கி தராத ஆத்திரத்தில் தாக்கியுள்ளாரே தவிர, விஸ்வநாதனை கொலை செய்யும் நோக்கில் தாக்கவில்லை எனக்கூறி, அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை 8 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும் தற்போது ஜாமினில் உள்ள தனபால், மீதமுள்ள தண்டனையை அனுபவிக்கும் வகையில் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கும் படி ஈரோடு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களுக்கு? கேள்வியெழுப்பும் உயர் நீதிமன்றம்!