அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார், முறைகேடாக பணி நியமனங்கள் செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவைத் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
அதன்படி புகார் குறித்து விசாரணை செய்ய அலுவலகம் பசுமை வழிச் சாலையில் அமைக்கப்பட்டு, சூரப்பா மீதான விசாரணையை நீதியரசர் கலையரசன் தொடங்கியுள்ளார்.
மேலும், ஊழல் புகார் குறித்து தெரிவித்த சூரப்பா, "என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல. விசாரணைக்குழு அழைத்தால் அதற்கு விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
தற்போது, நீதியரசர் கலையரசன் விசாரணை தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஐந்து பக்க கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அக்கடிதத்தில், சூரப்பா அப்பழுக்கற்றவர், துணைவேந்தர் பொறுப்பில் அவர் நேர்மையாகவும் திறம்படவும் செயலாற்றிவருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சூரப்பா மீது தொடங்கப்பட்டிருக்கும் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனு மீதான வழக்கு இன்று (டிச. 02) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புல்லட் ரயிலுக்கு சுற்றுச்சூழல் அனுமதி!