பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என தமிழ்நாட்டு கட்சிகள் அனைத்தும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக அறிவித்தார் டிடிவி தினகரன்.
இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்றாவது அவர் பொதுவெளியில் தோன்றுவாரா அல்லது தொண்டர்களுக்கு ஏதேனும் செய்திகளை முன்வைப்பாரா என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் அவர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "ஜெயலலிதா காட்டிய லட்சியப் பாதை விரிந்து கிடக்கிறது. அதில் அதிமுகவின் வெற்றி பயணம் தொடரவேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்தால் எவ்வாறு உணர்வோமோ அந்த உணர்வோடு அதிமுகவில் தாயின் பரிவை, பாதுகாப்பைத் தொடர்ந்து இனியும் உணரலாம்.
வீழ்ந்து கிடக்கும் நம் எதிரிகள், எஃகு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுவிட மாட்டோமா என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
ஜெயலலிதாவுடனான 33 ஆண்டுகள் பயணத்தை நினைத்தே வாழ்நாளை கழித்துவிடலாம் என இருந்தேன், இருந்தாலும் இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுகவை கீழிறக்கிவிடக் கூடாது என்ற அக்கறை, தொண்டர்களின் கட்டளையால் பொதுவாழ்வு என்ற வேள்வியில் என்னை அர்ப்பணித்துக்கொண்டேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதா இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. இருப்பினும் ஜெயலலிதா திடீர் மறைவால் நமக்குப் பெரிய கடமை உள்ளது. அதிமுகவையும் தமிழ்நாட்டையும் கண்களெனக் காத்திடச் சூளுரைப்போம். ஜெயலலிதா பிறந்தநாளை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தை அவர் அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.