தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜுன் 21ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முறைப்படி ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு கூறியதாவது, “16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜுன் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என மரபுப்படி தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். அவரும் நேரில் வந்து கலந்து கொண்டு உரையாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரில் ஒளிபரப்புவது குறித்து பரிசீலனையில் உள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது. நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து அறிக்கையளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும். கரோன தடுப்பு பணிகளிலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் எதிர்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிவாரணங்களை வழங்கியுள்ளனர். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்தப்படும் என்பது குறித்து ஜுன் 21ஆம் தேதி அலுவல ஆய்வுக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கப்படும்” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
இதையும் படிங்க: டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்!