சென்னை : சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,
“தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் பட்டதாரியாக மாறவேண்டும் என்ற முதலமைச்சரின் லட்சியம் நிச்சயம் வெல்லும். இந்த ஓராண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஏராளம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1,070 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆசிரியர்களுக்கு விருப்பப் பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. காலியாக உள்ள 452 ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விடுதிகளை மேம்படுத்த உயர்மட்டக்குழுவின் அறிக்கையை பெற்று முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரூ.309.55 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 23 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எஞ்சிய 3 அறிவிப்புகளை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. பஞ்சமி நிலம் குறித்து சட்டம் இயற்றும் நடவடிக்கைகள் ஆய்வு நிலையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஐடி துறையில் 13 புதிய அறிவிப்புகள் - அறிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ்!