சென்னை: கியூபாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கியூபாவுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சார்பில் அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அமெரிக்காவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், "உலகில் இந்தியா உள்பட 184 நாடுகள் கியூபா மீதான தடையை நீக்க ஆதரவளித்தும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி கியூபாவிற்கு எதிராக அடக்குமுறையை கையாண்டு வருகிறது.
கியூபா விடுதலை அடைந்தபோது முதல்முதலாக ஆதரித்த நாடு அமெரிக்கா. தற்போது அமெரிக்கா கியூபாவுக்கு எதிராக அடக்குமுறையை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்து கியூபாவில் குடியேறியவர்கள் மூலமாக அந்நாட்டில் அரசுக்கு எதிரான கலகங்கள், போராட்டங்கள் நடத்தப்படுகிறன. கியூபா மக்களுக்கு எதிராக அமெரிக்கா சதி செய்கிறது. இந்திய அரசு கியூபாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக அமெரிக்காவை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தப்படும் என இடதுசாரி கட்சிகள் அறிவித்தன. இதனால் அமெரிக்க தூதரகம் முன்பு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரிடம் ஆலோசித்து துணைவேந்தரை தேர்வு செய்ய வேண்டும்