சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவை தடை செய்ய ஓபிஎஸ் தரப்பினர் செய்த அனைத்து முயற்சிகளும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனை தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் வரும் ஜூலை 17ஆம் தேதி அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். அன்றே புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
அடுத்ததாக ஓ.பன்னீர் செல்வத்திடம் இருக்கும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை மாற்றுவதற்கு எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மேலும் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான நிலையில் முதல் எம்எல்ஏக்கள் கூட்டம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாடிய ரோஜா மாலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்