நிலத்தகராறு வழக்குத் தொடர்பாக வழக்கறிஞர் ஆதிகேசவலுவை கடந்த 26ஆம் தேதிக்குள் கைதுசெய்து முன்னிறுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
இந்நிலையில், இன்று மாலை அண்ணா சாலை காவல் ஆய்வாளர் சந்திரமோகன், சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோர் உயர் நீதிமன்றம் அருகே வைத்து வழக்கறிஞர் ஆதிகேசவலுவை கைதுசெய்தனர்.
அப்போது, தலைமைக் காவலர் குடிபோதையில் இருந்ததாகவும், முறையான பிடியாணை ஆர்டரை காண்பிக்காமல் தகாத வார்த்தையால் வழக்கறிஞர் ஆதிகேசவலுவை திட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், தலைமைக் காவலர் குடிபோதையில் மூத்த வழக்கறிஞரைத் தாக்கியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 4 மணி நேரமாக சாலை மறியல் நடைபெற்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதனிடையே, இணை ஆணையர்களான பாலகிருஷ்ணன், துரை குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும், தலைமைக் காவலர் மீது முறையாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் வழக்கறிஞர்கள் அனைவரும் கலைந்துசென்று பூக்கடை காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்றனர்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக 'ஒன்றிணைவோம் வா' - எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு