சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவருக்கு இரண்டு முறை சமன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் வரும் 18ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகுவதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கைத் தொடர்ந்த விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் தமிழர் முன்னேற்ற படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி இருவரிடமும் ஒரு கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சீமான் தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நடிகை விஜயலட்சுமி பெங்களூர் வீட்டின் முகவரிக்கும், அதே போல் வீரலட்சுமி சென்னை ராமாபுரம் வீட்டின் முகவரிக்கும் இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் தன்னை பற்றி பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும், ஊடகங்கள் முன்னிலையிலும் அவதூறாக பேசி தொடர்ந்து தன்னை இழிவுப்படுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் இருவரும் பொது வெளியில் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். ஊடகங்கள் முன்னிலையில் அல்லது செய்தித்தாள் வழியாக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. மேலும் மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்யவில்லை என்றால் 15 நாட்களுக்கு பிறகு நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜயலட்சுமி எழுதிக் கொடுத்த கடிதத்தின்படி காவல்துறை அந்த வழக்கை கைவிட்டனர். அதன் பிறகு மீண்டும் அவர் பெங்களூரிலிருந்து சமூக வலைத்தளம் மூலமாக வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், அதன் பிறகு சிலர் தூண்டுதலின் பேரில் மீண்டும் தன் மீது புகார் அளித்து வருகிறார்.
மேலும் வீரலட்சுமி என்பவரும் உடன் சேர்ந்து தன்னை இழிவுபடுத்தும் வகையில் தனது அரசியல் பயணத்தில் கலகத்தை ஏற்படுத்தும் வகையிலும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார்கள் எனவும் அதன் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் மிகப் பெரும் தலைவலி.. வேலையை உதறிய ஆசிரியருக்கு மீண்டும் பணி நியமனம்!