கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு இன்று (மே 7) முதல் செயல்படத் தொடங்கியது.
தேசிய சித்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் தொடங்கி இருப்பதால், அங்கு செயல்பட்டு வந்த வெளிநோயாளிகள் பிரிவு மே1 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள புற நோயாளிகள் பிரிவில் கரோனா சிகிச்சைக்கு 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தாம்பரம் சித்த மருத்துவமனை இயக்குநர் மீனாகுமரி தொடங்கி வைத்தார்.
அந்த மையத்தில் மிதமான அறிகுறி, அறிகுறி இல்லாதவர்கள்,அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சித்த மருத்துவ முறைப்படி கபசுரக் குடிநீர், சித்த மருந்துகள் வழங்கப்படுகிறது. மேலும் மூச்சுப்பயிற்சி, யோகா பயிற்சி, ஆவி பிடித்தல் போன்ற பயிற்சிகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.
சித்த மருத்துவத்தின்படி வீட்டுத் தனிமைக்கு செல்பவர்களுக்கு உளவியல், சமூகவியல் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.