சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.16) தலைமைச் செயலகத்தில், 'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தினை ரூ.11.14 கோடி மதிப்பில் 73 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகிப்பதன் தொடக்கமாக மரக்கன்றுகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகுப்பதோடு மண் வளம் அதிகரித்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த பசுமைப் பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படும்.
விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு வகுத்து, செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மானாவாரி நிலத் தொகுப்புகளில் பயன்தரும் மரக்கன்றுகளை வளர்க்கும் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் நோக்கத்துடன், 'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' என்ற புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தினை 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.11.14 கோடி மதிப்பில் செயல்படுத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ், தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். நடப்பாண்டில், முதற்கட்டமாக 73 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
ஊக்கத்தொகை
இம்மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களின் வரப்புகளிலோ அல்லது குறைந்த செறிவில் விவசாய நிலங்களிலோ நடவு செய்யலாம்.
வரப்பில் நடவு செய்வதாக இருந்தால், ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்வதாக இருந்தால் ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும்.
மேலும், நடவு செய்த 2ஆம் ஆண்டு முதல் 4ஆம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இம்மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து அறுவடை செய்யும் போது, வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில், நடவுசெய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விவசாயிகளுக்கு முன்னுரிமை
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலாகவோ தங்கள் பெயரை பதிவு செய்து உரிய அலுவலரின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை அருகிலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பார்வதி அம்மாளை நேரில் சந்திக்கும் சூர்யா!