ஆஸ்ரம் பள்ளி வளாக பிரச்சினையில், நீதிமன்ற அவமதிப்பில் லதா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவிவந்தது. இந்நிலையில், இது குறித்து லதா ரஜினிகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆஷ்ரம் பள்ளி வளாகத்துக்கான வாடகை முறையாகச் செலுத்தப்பட்டுவருகிறது. வாடகை பாக்கி உள்ளது என்பதில் உண்மை இல்லை. கரோனா காரணமாக ஏப்ரல் 2020 காலக்கெடுவுக்குள் வேறு இடத்துக்கு பள்ளியை மாற்ற முடியவில்லை. எங்கள் மனுவை ஏற்று ஏப்ரல் 2021 வரை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ஆஸ்ரம் பள்ளியை வாடகை கட்டடத்தில் நடத்திவருகிறார். வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடத்திற்கு வாடகை தொடர்பாகப் பிரச்சினை இருந்துவந்தது.
2013ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாடகை பாக்கி ஒரு கோடியே 99 லட்சம் ரூபாயைச் செலுத்த உத்தரவிடக்கோரி இட உரிமையாளர்கள் 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2017 ஆகஸ்ட் 16ஆம் தேதி திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.

2018 ஆகஸ்ட் 3ஆம் தேதி இரு தரப்பிற்கும் உடன்பாடு ஏற்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்வது என ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக பள்ளி வளாகம் காலிசெய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரு வருடம் அவகாசத்தை நீட்டிக்கக்கோரி சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் கூடுதல் மனு தாக்கல்செய்திருந்தார். இது குறித்த விசாரணையில் வாடகையை முறையாகச் செலுத்திவருவதாகவும் எனவே கால அவகாசத்தை இந்தக் கல்வியாண்டு முடியும்வரை நீட்டிக்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி சதீஷ்குமார், கிண்டியில் ஆஸ்ரம் பள்ளி இயங்கிவரும் கட்டடத்தை காலிசெய்ய ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்திற்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதிவரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.