சென்னை : திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சையது சமீர். அவருக்கும், அவரது உறவினர்கள் மூன்று பேருக்கும் அங்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. மலேசியாவில் குடியேறிய அவர்கள், தங்களது சொத்துக்களை பராமரிப்பதற்காக ஃபரூக் அஹமது என்பவரை நியமித்திருந்தனர்.
பல ஆண்டுகளாக அந்த சொத்துகளுக்கு உரிமைக் கொண்டவர்கள், ஊர் திரும்பாததை பயன்படுத்திய ஃபரூக், அச்சொத்துகளுக்கு போலி ஆவணங்களை தயாரித்து, சட்ட விரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். அத்துடன், அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு போலி ஆவணங்களைக் கொடுத்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீட்டுத் தொகையை மோசடியாக பெற்றுள்ளார்.
இந்த தகவலை அறிந்த நில உரிமையாளர்கள், காவல் துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அதன் மீது வழக்குப்பதிவு செய்யப்படாததால், உயர் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், அதில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை காவல்துறையினர் சேர்க்கவில்லை என பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனையடுத்து, இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது, இன்று (பிப்.26) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் உள்ள தீவிரத்தை உணர்ந்து, அரசு அலுவலர்களின் தொடர்பை கண்டறிய வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிட வேண்டும்.
உதவி ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து வழக்கை விசாரித்து, குற்றச்சாட்டிற்குள்ளாகி இருக்கும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எதிராக விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என சிபிசிஐடி கூடுதல் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : மோடி உருவப்படம் இருந்த பேனர் எரிப்பு - கிராமத்தில் பதற்றம்!