சென்னையில் நெடுஞ்சாலை திட்டத்திற்காக வனிதா என்பவருக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்திற்கு அரசு தரப்பில் இழப்பீட்டுத் தொகையும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நிலத்தின் உரிமை தொடர்பாக, வனிதாவுக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததனால், இழப்பீட்டுத் தொகையை உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்த சென்னை சிறப்பு துணை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
சட்டவிரோதமாக இழப்பீட்டுத் தொகையை எதிர்தரப்பினருக்கு வழங்கக்கோரி சிறப்பு துணை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எதிர்தரப்பினருக்கு வழங்கப்பட்ட அந்த இழப்பீட்டுத் தொகையை மீண்டும் வசூலித்து உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், சட்டவிரோதமாக இழப்பீட்டுத் தொகையை வழங்கி சிறப்பு துணை ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
2018ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, சிறப்பு துணை ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு எதிரான விசாரணையை முடித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வனிதா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இழப்பீட்டுத் தொகையை ஆறு வாரங்களில் வசூலிக்க வேண்டும் எனவும், குற்றம் இழைத்த அலுவலர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.