சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த அலிமா (45) என்பவர் தனது கணவர் மற்றும் மகனை பிரிந்து வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில், நாராயணசாமி தெருவில் வீட்டு வேலை செய்வதற்காக நடந்து சென்றபோது, மண்ணில் புதைக்கப்பட்டு மழை நீரில் சேதமாகியிருந்த மின்சார கம்பியை மிதித்தார். இதனால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏற்கனவே, இதுபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இருவர் அளித்த புகார் மீது மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காததே அலிமா உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்பு தலைவர் துரை. ஜெயச்சந்திரன், மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக மின்சார வாரிய தலைவர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.