சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன், இவரது மனைவி பொம்மி பிரசவத்திற்காக கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில் பணியில் இருந்த செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். குழந்தையை வெளியே எடுக்க முயற்சி செய்தபோது குழந்தையின் தலை துண்டாகி வந்துள்ளது. குழந்தையின் உடல்பகுதி பொம்மியின் வயிற்றிலேயே சிக்கியது.
இதைத்தொடர்ந்து அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடல்பகுதி அகற்றப்பட்டது. இதுகுறித்து நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவி மீனாகுமாரி தானாக முன்வந்து வழக்கை விசாரித்தார். பின்னர், இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோர் ஆறு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.