அரசுப் பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்கிறது; அதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்க முடியுமா? எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் பேசிய அவர், "மத்திய அரசு 8ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தினத்தைச் சேவை தினமாகக் கொண்டாடி வருகிறது.
ஏழு ஆண்டுகளாகப் பிரதமர் மோடி சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். பல்வேறு மக்கள் நலன் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. திமுக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகச் செயல் படுத்தவில்லை. கடந்த வாரம், இரண்டு நாள்கள் தளர்வு அளித்து வெளியூர்களில் கரோனாவை திமுக அரசு பரப்பி இருக்கிறது.
அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசு தடுப்பூசிகளைப் பாரபட்சமின்றி வழங்குகிறது. கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளை முறையாக அரசு பயன்படுத்துவதில்லை.
மக்கள் கரோனா தடுப்பூசி போடாமல் தயங்குவதற்கு திமுக தான் காரணம். மேலும் பிஎஸ்பிபி பள்ளி பாலியல் அத்துமீறல் தொடர்பாக யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது...? அரசுப் பள்ளிகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்க முடியுமா....?
திமுக கோவை மாவட்டத்தை மட்டும் புறக்கணிக்கிறார்களோ? என்ற அச்சம் உள்ளது. அதனால் தான் ட்விட்டரில் #gobackStalin ட்ரெண்டாகி வருகிறது" எனக் கூறினார்.