சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘பிரதமர் வேட்டி சட்டை அணிந்து வலம் வந்ததை வரவேற்கிறோம். அவருக்கு வேட்டியை கட்டி விட்டவர்கள் ஏற்ற இறக்கமாக கட்டியுள்ளனர். அதை சரியாகக் கட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வெளிநாட்டு அதிபர்கள் வருகையால்தான் சென்னை மற்றும் மாமல்லபுரம் சுத்தமாக ஆகியிருக்கிறது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும், அரசு அலுவலர்களும் தலைகுணிய வேண்டும். நாங்குநேரி தொகுதியிலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கும் எங்கள் கூட்டணிக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஏனென்றால் அதிமுகவின் தவறான ஆட்சியையும், பாஜகவின் சர்வாதிகார ஆட்சியையும் மக்கள் வெறுக்கிறார்கள். மக்கள், மக்களவைத் தேர்தலில் எப்படி வாக்களித்தார்களோ அதுபோல் இந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்.
மோடி ஒரு தலைவர் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் பெருமையை கூறியிருக்கலாம். காமராஜர் ரஷ்யாவுக்கு சென்றபோது அங்குள்ள மக்களுக்கு தமிழ் கலாசாரம் தெரியவேண்டும் என்பதற்காக வேட்டி, சட்டை அணிந்து சென்றார். தமிழ்நாட்டில் வேட்டி சட்டை அணிவது பெரிதல்ல. இருந்தாலும் மோடி வேட்டி சட்டை கட்டியதை நான் வரவேற்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: கே.எஸ்.அழகிரி சரியான கூமுட்டை -அமைச்சர் செல்லூர் ராஜூ