சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கிய ஏரியான பூண்டிக்கு, கிருஷ்ணா நதிநீர் மூலம் .05 டிஎம்சி நீர் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் நீர் இருப்பு குறைந்து வறண்ட நிலையில் காட்சியளித்துள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு பொதுப்பணித் துறை அலுவலர்கள், ஆந்திராவின் நீர்ப்பாசன அலுவலர்களை தொடர்புகொண்டு தெலுங்கு-கங்கா ஒப்பந்தப்படி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீரை திறக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அந்த ஒப்பந்தப்படி ஆந்திர அரசு தமிழ்நாட்டுக்கு 12 டிஎம்சி நீரை ஒரு வருடத்திற்கு கொடுக்க வேண்டும்.
எனவே, உடனடியாக கண்டலேறு அணையிலிருந்து 2100 கன அடி கிருஷ்ணா நதி நீரை 152 கிமீ நீளம் கொண்ட கண்டலேறு-பூண்டி கால்வாய் வழியாக திறந்து விட்டனர்.
முதலில் வினாடிக்கு 200 கன அடியாக வந்த நீர், படிப்படியாக 300, 400, 500 என அதிகரித்து தற்போது 650 கன அடியாக உள்ளது.
இதுகுறித்து பேசிய பொதுப்பணித் துறை அலுவலர் ஒருவர், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரை நிறுத்துவதாக இதுவரை எங்களுக்கு தகவல் வரவில்லை. வரும் பருவ மழைக்கு முன் நீரை அதிகளவில் தேக்கி வைப்பதற்கான பராமரிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் பூண்டியின் நீர் மட்டம் 3000 மில்லியன் கியூ பிக் அடியாக இருந்தது. ஆனால் தற்போது வெறும் 652 மில்லியன் கியூபிக் அடியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு கால்வாய் வழியாக குடிநீருக்காக 179 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.