சென்னை: சென்னையை அடுத்த பசுமை வழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், அவரது ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மாவட்டச் செயலாளர் பதவிக்காக, எடப்பாடி பழனிசாமி அணியில் தற்போது உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி என்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டார்.
இதேபோல் பலரிடம் கே.பி.முனுசாமி பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின்போது, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு வெகுதூரம் சென்று விட்டதாகவும், அதிமுகவிற்கு உண்மையாக ஓ.பன்னீர்செல்வம் உழைப்பாரா என கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.
தர்மயுத்தத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்த கே.பி.முனுசாமி, பணம் சம்பாதிக்கவே எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மாவட்டச் செயலாளர் பதவிக்காக ஒரு கோடி ரூபாய் அவர் கேட்டார். அந்த ஆடியோவை தற்போது வெளியிட்டுள்ளேன். என்னைப் போல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
மேலும் சீசனுக்கு ஏற்றார்போல் வியாபாரம் செய்யும் கே.பி.முனுசாமி, வாயை மூடவில்லை என்றால், அடுத்த இரண்டு நாட்களில் வீடியோ ரிலீஸ் செய்வேன். இனி ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாகப் பேசினால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமிக்கு எட்டப்பன் வேலையை கே.பி.முனுசாமி பார்த்து வந்தார்.
என்னைப் போல் பலர் பணம் கொடுத்து கே.பி.முனுசாமியிடம் ஏமாந்துள்ளனர். கட்சிப் பொறுப்பிற்காக அப்போது பணம் கொடுத்தது, எனக்குத் தப்பாகத் தெரியவில்லை. ஆனால், இன்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்பாக வரம்பு மீறி கே.பி.முனுசாமி பேசும்போது, கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் கேட்ட ஆடியோவை வெளியிடுவதில் தவறில்லை” என்றார்.
இதனையடுத்து இது குறித்துப் பேசிய கே.பி.முனுசாமி, "கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான். ஆனால், தேர்தல் செலவுக்காகக் கடனாகப் பணம் கேட்டதை, அவர் தவறாகத் திரித்துக் கூறுகிறார். ஆடியோ, வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை” எனக் கூறினார்.
இதையும் படிங்க: இந்த சாதியினர் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேறும்! - அன்புமணி சொன்ன சீக்ரெட்