சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி, "அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பதோடு மத்திய அரசுக்கு தாரை வார்க்க உள்ளதாக தகவல் பரவுகிறது. அண்ணா பல்கலையை பிரித்தாலும் அண்ணாவின் பெயரை மற்றும் நீக்கக் கூடாது" என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சென்னை பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் தேடுதல் குழுவின் தலைவராக ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் காலத்தில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சிறந்த கல்வியாளர்கள் இல்லையா? ஆளுநரிடம் கூறி மாற்றம் செய்ய வேண்டும்" என கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், "அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு பல்கலை அந்தஸ்து பெறுவது தொடர்பாக ஐந்து அமைச்சர்களை கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்திருக்கிறார். அந்தக் குழு சாதக பாதகங்களை கண்டறிந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கவோ, அதன் பெயரை மாற்றவோ, அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்த்து கொடுப்பதோ தமிழ்நாடு அரசின் நோக்கம் இல்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவிற்கு பல்கலைக்கழகத்தின் செனட், சிண்டிகேட் ஆகியவற்றில் இருந்து தலா ஒருவரையும், ஆளுநரின் பிரதிநிதியாக ஒருவரையும் நியமனம் செய்துள்ளனர்.
ஆளுநரின் நியமனத்தில் நாம் தலையிட முடியாது. ஏற்கனவே இவர் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்துள்ளார்" என்றார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கேள்விக்கு அமைச்சர் அன்பழகன் பதில் அளித்தார். அப்போது, "அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்தாளும், தொடர்ந்து அண்ணாவின் பெயரில்தான் செயல்படும்.
சீர்மிகு பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் தரம் உயர்த்தப்பட்டாலும், தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எந்த பங்கமும் வராது. அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் பகுதி-1, பகுதி-2 என இருப்பதை ஒரே பகுதியாக மாற்றுவதற்கு பரிசீலனையில் உள்ளது. ஆனால் கல்லூரி மாணவர்கள் வந்து செல்லும் நேரம் தொடர்பான பிரச்சனை உள்ளது.
எனவே தொடர்ந்து அது குறித்து ஆலோசித்து வருகிறோம். தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2 ஆயிரத்து 331 பேராசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவு பெற்ற பிறகு தற்போது அரசு கலை கல்லூரிகளில் பகுதி 2-ல் பணியாற்றிவரும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லூரிகளில் நியமிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலி முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள்: தகவல் விரைவில்...