நாளை, ஞாயிற்றுக்கிழமை (மே.30) சென்னை, கோயம்பேடு காய்கறிச் சந்தை திறந்திருக்கும் என அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை மூடப்பட்டிருக்கும். ஆனால், தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் காய்கறிகள் கடைகளும் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் மக்களுக்குச் சுமார் 650க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிக் கடைகள் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. தோட்டக் கலைத்துறையினர், வியாபாரிகள் சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று குடியிருப்புப் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்காக இந்த வார ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள 200 மொத்த விற்பனை கடைகளும், 1800 சிறு மொத்த கடைகளில் 30 விழுக்காடு, அதாவது 600 கடைகளும் திறந்திருக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வழக்கமாக கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பொருள்களை வாங்க வரும் மொத்த வியாபாரிகளின் வருகையை விட தற்போது ஊரடங்கு காரணமாக வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பெயிண்டர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் வருவதாகக் கோயம்பேடு வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: சிறு, குறு, நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டும் - கமல்ஹாசன்