சென்னை: சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் கோயம்பேடு சந்தை எனக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தச் சந்தை முற்றிலுமாக மூடப்பட்டது. கரோனா தொற்றின் தாக்கம் சென்னையில் குறைய் தொடங்கியதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வியாபாரிகள் தரப்பில் பல்வேறு கட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதற்காக அரசு அலுவலர்கள், வியாபாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் நாளை மறுநாள் (செப். 28) கோயம்பேடு சந்தையை திறக்க அனைத்துக்கட்ட ஏற்பாடுகளையும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) மேற்கொண்டுவந்தது. இதற்கிடையில், சந்தை மூடப்பட்ட காலத்தில், சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தப் பணியில் முதல் கேட்டில் ஆரம்பித்து 9ஆவது கேட் வரையும் பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த ஒட்டுமொத்த பாதாளச் சாக்கடைகள், சாலைகள், சுற்றுச்சுவர்கள், கழிப்பறைகள் என அனைத்தும் மறு சீரமைக்கப்பட்டுவருகின்றன.
கரோனா தொற்றால் மூடப்பட்ட கோயம்பேடு சந்தை தற்போது புதுப்பொலிவு பெற்றுவருவது நல்லது என்று கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்துவந்த வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் சந்தையில் இனி சுகாதார வசதிகள் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாது என்றும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
28ஆம் தேதி திறக்கப்பட உள்ள கோயம்பேடு சந்தையில் மொத்த காய்கறிகள் விற்பனை கடைகள் 200 மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மீதமிருக்கும் மூன்றாயிரத்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் அனைத்தும் நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதைப் பொறுத்தே அனுமதிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சி.எம்.டி.ஏ.வின் இந்த முடிவு பொதுமக்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் அமைந்துள்ளது என்று அரசு அலுவலர்கள் கூறுகின்றனர். அரசின் கோரிக்கைகளை வியாபாரிகள் கடைப்பிடிப்பதுடன் மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி, வருங்காலத்தில் நோய்த்தொற்று பரவாத பகுதியாக கோயம்பேடு சந்தை இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.