கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவக் காற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக மழையும், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கன மழையும், திருவள்ளூர்,வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மேல்பவானி பகுதியில் 32 சென்டி மீட்டரும், அவலாஞ்சி பகுதியில் 22 சென்டி மீட்டரும், கூடலூர் பஜார் பகுதியில் 20 சென்டி மீட்டரும், மேல் கூடலூர் பகுதியில் 19 சென்டி மீட்டரும், கோவை வால்பாறை பகுதியில் 33 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 4 முதல் 8ஆம் தேதி வரை; மன்னார் வளைகுடா, மத்திய - தெற்கு வங்கக்கடலில் அந்தமான் பகுதிகளிலும், கேரள கடலோரப் பகுதிகளிலும்; லட்சத்தீவு, மஹாராஷ்டிரா, கோவா கடலோரப் பகுதிகளிலும், தென் மேற்கு, மத்திய கிழக்கு, மத்திய மேற்கு கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... இயலப்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்