சட்டப்பேரவையில் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் பத்திரிகையாளர் ஒருவர் முதலமைச்சருக்கு சவால் விடுகிறார் எனவும், அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொடநாடு தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அது குறித்து விரிவாக விவாதிக்க முடியாது எனவும், பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சரைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கொடநாடு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் எனவும், அவர்களை நீதிபதி விடுதலை செய்துவிட்டார் எனவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு யாருமே ஜாமீன் கொடுக்க முன்வராத நிலையில், திமுகவினர் தான் அந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற்றுத்தந்தனர் என்றும் கூறினர்.