முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து கொள்ளை முயற்சி, கொலை வழக்கில் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் இறந்தார்.
கனகராஜ் உயிரிழந்த அடுத்த 24 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சயானும் சாலை விபத்தில் சிக்கினார். அதில் அவரது மனைவி மற்றும் 5 வயது மகள் உயிரிழந்தனர். ’
வழக்கில் தொடர்புடையவர்கள் மரணமடைவதும், அடுத்தடுத்து விபத்தில் சிக்குவதும் ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம் போல் நிகழ்ந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இபிஎஸ்ஸுக்கு தொடர்பு?
இந்தச் சூழலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இவ்விவகாரத்தில் தொடர்பிருப்பதாக மனோஜ், சயான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கடந்த ஆண்டு இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக மறு விசாரணை நடத்த வேண்டும் என சயான் கோரியிருந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை அவர் வாக்குமூலத்தில் கூறியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொடநாடு வழக்கில் என் பெயரை சிக்க வைக்க சதி நடப்பதாக பேசினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என நீங்கள்தான் (அதிமுக) கூறுகிறீர்கள். அதனால் தேர்தல் அறிக்கையில் கூறியபடி நடந்துகொள்கிறோம். அரசியல் நோக்கத்தோடு விசாரணை நடைபெறவில்லை என்றார்.
ஆளுநருடன் சந்திப்பு
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, “ கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் அதை எப்படி தேர்தல் வாக்குறுதியாக அளிக்க முடியும்.
கொடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கேரளாவில் ஏற்கனவே வழக்குகள் இருக்கின்றன. இந்த வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் திமுக நடந்துகொள்கிறது. சயானுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சேர்க்க சதி நடக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, குறுக்கு வழியில் இந்த வழக்கை திசை திருப்ப முயல்கின்றனர். நீதிமன்றத்தில் முடியும் தருவாயில் இருக்கும்போது பொய் குற்றச்சாட்டு கூறுகிறார்கள்” என்றார்.