சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை பாதிப்பினாலும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வரத்து குறைவு காரணமாகவும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 30 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த தக்காளி நேற்று 100 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்தது. குறிப்பாக, நேற்று (மே 21) சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய் வரை விற்பனையானது.
நவீன் தக்காளியின் விலை 100-120 ரூபாய் வரையும், நாட்டு தக்காளியின் விலை 80-100 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. பொதுமக்கள் சிரமத்தை போக்க அரசின் பசுமை பண்ணையில் தக்காளி கிலோ 70 முதல் 85 ரூபாய் வரை விற்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ‘இந்த விலை குறைப்பினால் நேற்று பிற்பகல் வரை, பசுமை பண்ணையில் 250 கிலோ தக்காளி விற்பனையானது’ என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பின் ஆலோசகர் சௌந்தரராஜனிடம் பேசியபோது, "அண்டை மாநிலத்தில் மழைப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் தக்காளி விளைச்சலானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தக்காளி விலை அதிகரித்து வந்தது. நேற்று மட்டும் 20 லாரிகளில், ஒரு லாரிக்கு 12 டன் கணக்கில் தக்காளி கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு வந்துள்ளது எனவே வரும் ஓரிரு நாட்களில் தக்காளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க : BREAKING: பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு... இப்போ எவ்வளவு தெரியுமா...?