சென்னை: சென்னைப் பல்கலைக் கழகத்தின் பொறுப்பு தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலரை மாற்றி விட்டு, முழு நேரமாக ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என அறிவு சமூகம் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அறிவுச் சமூகத்தின் தலைவர் தமிழ் முதல்வன், தலைமைச் செயலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில், “தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள சென்னைப் பல்கலைக்கழகம், 136 உறுப்புக் கல்லூரிகளைக் கொண்டு இயங்கும் ஒரு பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்கலைக்கழகம் ஆகும்.
இப்பல்கலைக்கழத்தின் மாணவர்களின் நலன் கருதியும், பல்கலைக்கழக நலன் கருதியும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) Controller of Examinations இளங்கோவன் வெள்ளைச்சாமி என்பவரை மாற்ற வேண்டுகிறோம். இளங்கோவன் வெள்ளைச்சாமி என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) Controller of Examinations எனும் பதவியில் விருப்பமின்றி செயல்படுகிறார்.
ஆகவே அவர் கிண்டி வளாகத்திலுள்ள அவருடைய உயிர் வேதியியல் துறையிலேயே தங்கிவிடுகிறார். அதனால் அவர் தேர்வுக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் அலுவலகத்திற்கு அரிதாகவே வருகிறார். மேலும் பணியை முழுமையாகச் செய்யாததாலும், அப்பணியில் ஆர்வமின்றி செயல்படுவதாலும் பல்வேறு பணிகள் தேங்கிக் கிடக்கின்றன.
குறிப்பாக சுமார் 1000 கோப்புகள் கையெழுத்திடாமல் தேக்கமடைந்து இருக்கின்றன. இதன்காரணமாக பல்வேறு துறைகளுக்கான பணிகள் அடுத்த நகர்வுக்குச் செல்லவில்லை. சுமார் 20 ஆயிரம் கல்லூரிச் சான்றிதழ்கள் கையெழுத்திடாமல் காத்துக்கிடக்கின்றன. அதனால் இளங்கலை மாணவர்கள் முதுகலைப் படிப்புக்குச் செல்லமுடியவில்லை.
முதுகலை மாணவர்கள் ஆய்வுப் படிப்புக்குச் செல்லமுடியவில்லை. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் வேலையில் சேரமுடியாமல் தவிக்கின்றனர். மாணவர்களுக்குக் குறித்த நேரத்தில் மதிப்பெண் பட்டியல் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் கேட்டுப்போனால், மதிப்பெண் சான்றிதழ் அச்சிட நிதியில்லை எனப் பல்கலைக்கழகம் தரப்பில் பதில் கூறப்படுகிறது.
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்கு விண்ணப்பித்து சேர்க்கை ஆணை பெற்றவர்கள் உரிய நேரத்தில் சேரமுடியவில்லை. மேலும், உயர்கல்வி பயிலுவதற்காக வங்கிகளில் கல்விக்கடன் பெறுவதற்குத் தகுதி பெற்றவர்கள், சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் கல்விக்கடன் பெறமுடியவில்லை.
உறுப்புக்கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப்படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கமுடியவில்லை என்பதனால், இளங்கலைப் படிப்பின் முதல் ஐந்து பருவத் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கிட்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இளங்கலைப் படிப்பில் தேர்வு முடிவு தெரியாமலேயே முதுகலை சேர்க்கைக்கு அனுமதிக்கும் வினோதம் இந்தப் பல்கலைக்கழகத்தில் நிகழ்கிறது.
மதிப்பெண் சான்றிதழ் காலதாமதமாக கிடைக்கப்பெறும் பட்சத்தில், அதில் குறைந்த மதிப்பெண்பெற்று தோல்வியுற்ற மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும் நிலை உருவாகிறது. இந்த இடத்தில், முதுகலைப் படிப்புப் படித்துக்கொண்டிருக்கும் போதே ‘இளங்கலையில் தோல்வி’ என்ற காரணத்தால், முதுகலைப் படிப்பு நிறுத்தப்படும் சூழலில் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
கல்லூரிகளுக்கான கேள்வித்தாள்கள் அமைக்கும் பணி தாமதமாகிறது. இதனால் 136 கல்லூரிகளுக்கான தேர்வுகள் தாமதமாகின்றன. அதனால் தேர்வு முடிவுகளும் தாமதமாகின்றன. ஆய்வு மாணவர்களின் ஆறுமாத கால அறிக்கை தாமதமாகிறது. மேலும், ஆய்வு மாணவர்களின் வாய்மொழித் தேர்வுகளும் நடத்த முடியவில்லை. இதனால், பலர் தகுந்த நேரத்தில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைத் தவற விடுகின்றனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
அதனால் மாணவர்களின் நலன் கருதியும், பல்கலைக்கழகத்தின் பாரம்பரியம் காப்பதின் அவசியம் கருதியும், மேற்கூறிய குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுத்து தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) Controller of Examinations பதவியிலிருந்து இளங்கோவன் வெள்ளைச்சாமி அவர்களை நீக்கி, தகுதியான புதிய தேர்வுக் கட்டுப்பாட்டாளரை (Controller of Examinations) நியமிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னைப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் ஏழுமலையிடம் கேட்டப்போது, “தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பில் உள்ளார். துறையின் பணியை முடித்துவிட்டு, அதன் பின்னர் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணிகளை மேற்கொள்கிறார். அவரின் பணியை தொடர்ந்து செய்து வருகிறார். தேர்வு மதிப்பெண் பட்டியல் அச்சிடுவதில் சில பிரச்சனைகள் உள்ளது. அதனை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "காவிரியில் 16,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை வைப்போம்" - அமைச்சர் துரைமுருகன் தகவல்