சென்னை: புளியந்தோப்பு கனிகாபுரம் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர். இவரது மனைவி சோனியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி சோனியாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மன்சூர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவி மற்றும் குழந்தையை அதே பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறை உதவி உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனையில் சோனியாவிற்குச் சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தையைப் பரிசோதித்து இறந்து விட்டதாகத் தெரிவித்து உடற்கூராய்வு கூடத்திற்கு அனுப்பி உள்ளனர். சுமார் நான்கு நாட்கள் கழித்து அந்த குழந்தை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அப்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்திலிருந்த உதவி ஆய்வாளர் 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் முஸ்லிம் லீக் கட்சியினர் தலையிட்ட பின்னர் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து, எந்த ஒரு துணியும் சுற்றாமல் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்து விளக்கம் ஒன்று அளித்துள்ளனர். அதில், “டிசம்பர் 6 அன்று அன்று சோனியா (20) அவர்கள் வீட்டிலேயே ஒரு பெண் குழந்தையை இறந்த நிலையில் பெற்றெடுத்து தாயும் சேயும் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் (KMC) மருத்துவமனையில் டிசம்பர் 6 அன்று மாலை 05.07 மணிக்கு உள் நோயாளியாகக் கொண்டுவரப்பட்டனர்.
இறந்த பெண் குழந்தையைக், குழந்தை நல மருத்துவர் குழந்தையின் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்து குழந்தை இறந்ததை உறுதி செய்து பின் பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. குழந்தையின் தாய் சோனியா அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சையில் உள்ளார்.
டிசம்பர் 10 அன்று போலீஸ் விசாரணைக்குப் பின் குழந்தையின் உடலை விதிகளுக்கு முரணாக அட்டைப்பெட்டியில் வைத்து தந்தை மன்சூரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்மையென்று விசாரணையின் மூலம் மருத்துவமனை முதல்வருக்கு தெரியவந்ததை அடுத்து, உடனே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சம்மந்தப்பட்ட அரசுப் பணியாளரை பணியிடை நீக்கம் செய்தார்.
மேலும், இந்த நிகழ்வை மருத்துவ கல்வி இயக்கம் மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநர் நேரில் சென்று ஆய்வு செய்து முதல்வருக்குச் சம்மந்தப்பட்ட நபர்களின் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். மேலும், இந்த நிகழ்வை விசாரணை செய்வதற்காக மூன்று பேராசிரியர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் அளித்துள்ள தகவலில், குழந்தை வீட்டிலேயே பிறந்து உடனடியாக இறந்ததாலும், இயற்கை மரணம் என்பதாலும் இந்த குழந்தையின் மரணத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லாததால் இது தொடர்பாக விசாரணையை நடத்தப்படவில்லை. பிறகு மருத்துவமனையில் இருந்து குழந்தையின் உடலை திரும்பக் கொடுப்பதற்குக் கடிதம் கேட்டதால் காவல்துறை சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.