சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார் (52). இவர் அனகாபுத்தூர் பஜார் சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அப்பாவிற்க்கு உதவியாக அவரது மகன் யோகேஸ்வரன் என்பவர் மளிகை கடையில் இருந்து வருகிறார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இரண்டு நபர்கள் கடைக்கு சென்று இனி எங்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டும் எனக் கூறி பணம் கேட்டுள்ளனர். அதற்கு பணம் தர மறுத்துள்ள யோகேஸ்வரனை கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் மளிகை கடை மூடிவிட்டு வீட்டிற்க்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் யோகேஸ்வரனை வழிமறித்து கத்தி முனையில் கடத்திச் சென்றனர். பொழிச்சலூரில் உள்ள பாழடைந்த வீட்டுக்குள் கூட்டிச் சென்று அடித்து மது குடிக்க வைத்து இரவு முழுவதும் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க சங்கிலி ஒரு சவரன் மோதிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.
அங்கிருந்த ஆறு பேரும் கஞ்சா போதையில் தூங்கி விட்டதால் நேற்று காலையில் பாழடைந்த வீட்டில் இருந்து யோகேஸ்வரன் தப்பி சென்று அவரது வீட்டுக்கு வந்துள்ளார். உடனே யோகேஸ்வரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் யோகேஸ்வரனை கடத்திச் சென்று சித்திரவதை செய்திருந்த அந்த பாழடைந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பாடகர் சித்து மூஸ் வாலா கொலையில் சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை