‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா, கரிசல் காடு மக்களின் வாழ்க்கையை அவர்கள் மொழியிலேயே தந்தவர். தமிழ் இலக்கிய ஆளுமைகள் பலரும் போற்றும் கி.ரா, சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள் என தொடர்ந்து தன் எழுத்தின் மூலம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்.
இவர் எழுத்தைப் படித்து வளர்ந்த எழுத்தாளர்கள் ஏராளம். புகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் மார்குவஸ் எழுதிய ’One Hundred Years of Solitude’ என்ற நாவலுக்கு இணையானதுதான் கி.ராவின் ’கோபல்ல கிராமம்’ என்கிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
கரிசல் இலக்கியத்தின் முன்னோடியாக கருதப்படும் கி.ரா, கரிசல் வட்டார வழக்கு அகராதியை தொகுத்துள்ளார். இவரின் ‘கதவு’ சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளார். கி.ரா போன்ற எழுத்துலக ஆளுமை இன்னும் சரியான அங்கீகாரத்தை பெறவில்லை என பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இன்று அவரது 97ஆவது பிறந்தநாள்.