சென்னை: காஷ்மீரில் அவில்தார் பதவியில் பணிபுரிந்து வரும் இந்திய ராணுவ வீரரான பிரபாகரனின் மனைவி கீர்த்தி என்பவர் திருவண்ணாமலை படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மளிகைக் கடை நடத்தி வருவதாகவும், அந்த கடையை 120க்கும் மேற்பட்டோர் அடித்து உடைத்ததுடன், அவர் மனைவியை மானபங்க படுத்தியதாகவும் சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று (ஜூன் 11) பிரபாகரன் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், "ராணுவ வீரர் மனைவி குறித்த வீடியோ பொய்யானது. அவரது மனைவி சந்தவாசல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன் (எ) ஹரிதாஸ் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.
இந்த நிலையில், இது தொடர்பாகச் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் (Member of National Commission for Women) குஷ்பு நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, "பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைப்பதற்காகத்தான் தேசிய மகளிர் ஆணையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் கீர்த்தியிடம் பேசும் போது, அந்த பெண்ணை அடித்ததாகவும், வயிற்றில் உதைத்ததாகவும் கூறினார். இதற்கான அடையாளங்கள் இருப்பதால் பொய் சொல்ல முடியாது.
ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் ஒரு தரப்பினரின் சாட்சியை விசாரித்துப் பொய் என்று கூறுகின்றனர். ராணுவ வீரரின் மனைவி என்பதால் இதை முக்கியமாகப் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி சைலேந்திர பாபு உறுதி அளித்துள்ளார். கலாஷேத்ரா விவகாரத்தில் எங்களுடைய ரேகா சர்மா நடவடிக்கை எடுத்தார்கள். எங்கள் அமைப்பு என்று விதிமுறைகள் இருக்கிறது. அதற்குத் தகுந்தார்போல் விசாரணை நடத்திய பின்னர் கலாஷேத்ரா விவகாரத்தில் புகார் திரும்பப்பெறப்பட்டது.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு என்று ஒரு அமைப்பு உள்ளது. அந்த அமைப்பை மீறி அதில் தேசிய மகளிர் ஆணையத்தால் தலையிட முடியாது. எங்களுக்கென்று சில நடைமுறைகள் உள்ளது. நாங்கள் காவல்துறையோ, அமைச்சர்களோ கிடையாது அவர்களை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு. ஆனால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறோம். எங்களது செயல்பாடுகள் அனைத்தையும் வெளியில் கூற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஆரம்பத்தில் எங்களிடம் வரவில்லை போராட்டத்தில்தான் ஈடுபட்டனர் அதற்குப் பிறக்குதான் தேசிய மகளிர் ஆணையத்திற்கு வந்தனர்.
பெண்களுக்கு எதிராகப் பிரச்சனைகள் எங்கு நடந்தாலும், பெண்களுக்கு ஆதரவாகத் தேசிய மகளிர் ஆணையம் செயல்படும். ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரத்தில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தவில்லை. நாளைக்கு டெல்லி சென்று இதற்கான அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு: ஜூன் 16ம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு!