மக்கள் நீதி மய்யம் சார்பில், 'கரோனாவுக்குப் பிந்தைய உலகின் புதிய யதார்த்தம்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா டீச்சர் என அழைக்கப்படும் சைலஜா, பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ரமணன் லட்சுமி நாராயணன், எழுத்தாளரும் உளவியல் துறை நிபுணருமான டாக்டர் ஷாலினி ஆகியோருடன் காணொலி கான்ஃபெரன்ஸிங் மூலம் கமல்ஹாசன் உரையாடல் மேற்கொண்டார்.
இதில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சரிடம், 'எவ்வாறு நீங்கள் கரோனாவை எதிர் கொண்டீர்கள்' என கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். இதற்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர், "நாங்கள் மத்திய அரசு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடும் முன்பிருந்தே கரோனாவைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டோம்.
சிறு, சிறு நோய்த்தடுப்பு வேலைகளிலும் கவனமாக இருந்ததால், நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி விட்டோம். தமிழ்நாட்டில் சிறந்த சுகாதாரத்துறை உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கையுடன் இருந்திருந்தால் நோயைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். கரோனா விவகாரத்தில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. முன்னெச்சரிக்கை தான் மிகவும் அவசியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் ஆயிரத்தை தொட்ட கரோனா பாதிப்பு!