இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் கடந்த 25 நாள்களாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண முன்வராத மத்திய பாஜக அரசினை மக்கள் மன்றமும், உலகமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ளன, தன்முனைப்பை கைவிட்டு கீழே இறங்கி வராவிட்டால், வரலாறு ஒருபோதும் மன்னிக்கவே மன்னிக்காது.
பிறக்கும்போதே சிக்கல்!
இந்த சட்டங்களை எதிர்த்து ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)யிலிருந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்மித் கவுர்பாதல் பதவியை ராஜினாமா செய்தார் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய சிரோன்மணி அகாலிதளக் கட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகியது.
மோடி அரசுக்கு மிகப்பெரும் அவமானம்
78 முக்கிய ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ்., ஐபிஎஸ். அலுவலர்கள், நிர்வாகப் பிரமுகர்கள் வேளாண் சட்டத்தில் உள்ள ஓரவஞ்சனை, குறைபாடு, அரசமைப்புச் சட்ட விரோத, ஜனநாயக விரோதப் போக்குபற்றி விரிவாக விளக்கி, அறிக்கை வெளியிட்டுள்ளனர். பஞ்சாபில் வாங்கிய அரசுவிருதுகளைத் திருப்பித் தருவது தொடர்கிறது. இதைவிட மத்திய மோடி அரசுக்கு மிகப்பெரும் அவமானம் வேறு இருக்க முடியாது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் சரியாகப் புரிந்துகொண்டுள்ளாரா?
தான் ஒரு விவசாயி என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழ்நாடு மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பேசுவது, அவர் சரியானபடி சட்டங்களைப் புரிந்துகொண்டுள்ளாரா? அவருக்கு விளக்கியவர்கள் அதுபற்றி சரியான தகவல்களைத் தரவில்லை என்பது புரிகிறது.
விவசாயம், மாநில அதிகாரத்தின்கீழ் உள்ளது. அதில் சட்டம் செய்யும்முன் மாநில முதலமைச்சர்களைக் கலந்து ஆலோசித்ததா மத்திய அரசு? மாநில உரிமை பறிப்புக்கு இது ஒன்றே போதுமே! இதைவிட பெரிய பாதிப்பு வேறு வேண்டுமோ! ரேஷன் கடை நீடிக்குமா? என்ற கேள்வியும், பதில் பெற முடியாததாக உள்ளது.
வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது!
எனவே, மக்கள் மன்றமும், உலகமும் இந்த அதிகார ஆணவத்தினைப் பார்த்துக் கொண்டுள்ள நிலையில், உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைளை ஏற்று, அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தினால், வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது! ஜனநாயகம் இத்தகைய கார்ப்பரேட் காவலர்களை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பது போகப் போகபுரியும்!
பிரதமரின் பேச்சுக்கு தக்க பதிலடி!
கடந்த வெள்ளியன்று (18.12.2020) பிரதமர் மோடி மத்திய பிரதேச விவசாயிகளின் காணொலி கூட்டத்தில் உரையாற்றுகையில், ‘புதிய வேளாண் சீர்திருத்தங்கள் ஒரே நாளில் உருவானதல்ல; விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண இருபதாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் முயற்சி இது. ஆனால், டில்லியில் போராடும் விவசாயிகளை அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன’’ என்று கூறினார்.
இதற்குத் தக்க பதிலளித்து, மறுப்புத் தெரிவித்து- 40 தொழிற்சங்கங்களில் ஒன்றான அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) பிரதமருக்கும், மத்திய விவசாய அமைச்சர் தோமருக்கும் தனித்தனியே ஹிந்தியில் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லி எல்லைகளில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டப் பின்னணியில் எந்த அரசியல் கட்சியும் இல்லை. உண்மை என்னவென்றால், அரசியல் கட்சிகளின் கருத்துகளை மாற்றிக் கொள்ளும்படி விவசாயிகளின் போராட்டம் அவர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளது.
எந்த ஓர் அரசியல் கட்சியுடனும், எந்த ஒரு கோரிக்கையும் இணைக்கப்படவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்‘ என்று தெளிவுபடுத்தியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.