அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே.சி. பழனிச்சாமி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தபோது ஓ. பன்னீர்செல்வம் அணியில் செயல்பட்ட பழனிச்சாமி, சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சசிகலாவைத் தேர்வு செய்ததில் கட்சி விதிகளும் மீறப்பட்டுள்ளன என்று அவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.
இந்தச் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரைக் கட்சியைவிட்டு ஒதுக்கவே ஓபிஎஸ் தரப்போடு இணைந்து செயல்பட்டு வந்த பழனிச்சாமி, சசிகலாவுக்கு எதிரான வழக்கினை தொடர்ந்து நடத்தி வந்தார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், காவிரி மேலாண்மை விவகாரம் தொடர்பாக பாஜக மீது விமர்சனங்கள் வைக்கவே, அதிமுக தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், அதிமுக விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே கிடையாது என்றும், அப்படி பதவியில் உள்ளவர்கள் என்னை நீக்க எந்த விதிகளும் இல்லை என்றும் கே.சி. பழனிச்சாமி பதிலடி கொடுத்தார். மேலும், கட்சி விதிகள் திருத்தப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதத்தில் தலைமை செயலகம் சென்று முதலமைச்சர், துணை முதலமைச்சரை சந்தித்த கே.சி. பழனிச்சாமி, முதலமைச்சர் தன்னை அதிமுகவில் இணைய அழைப்பு விடுத்ததாகக் கூறினார். ஆனால், அதிமுக தரப்பு அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், அதிமுகவின் இரட்டை தலைமைக்கு எதிரான வழக்குகளில் அவர் வேகம் காட்டி வந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வந்தபோது, பழனிச்சாமி சிறையில் இருக்கும் சூழலில் வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிமுக கட்சிச் கொடியை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி வருவதாக அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் தமிழ்நாடு காவல்துறையால் கே.சி. பழனிச்சாமி அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மோசடி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாதத்திற்கு ஒன்றேமுக்கால் லட்சம் ரூபாய் வீணாக்கும் நீதிமன்றங்கள்