சென்னை: காசிமேடு காசிமா நகர் ஒன்றாவது தெருவைச் சேர்ந்த மீனவர் மைக்கேல் நாயகம். இவரது மனைவி அந்தோணி மேரி (60). நேற்று முன்தினம் (ஜூலை.28) அடையாளம் தெரியாத நபரால் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரது மகள் சுபா கொடுத்த புகாரின்பேரில் காசிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.
தோழி மகன் செய்த செயல்
அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் அந்தோணி மேரி கொலை செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு நன்கு தெரிந்த நபர்கள் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்தோணி மேரியின் தோழியின் மகனும், மைக்கேல் நாயகத்துடன் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் காசிதோட்டம் ஒன்றாவது தெருவைச் சேர்ந்த சகாயம் அலெக்ஸ் (42) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்தோணி மேரியை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
மேலும், தனக்கும் தன் மனைவிக்கும் பணத்தேவைக்காக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும், பணத்தேவையை நிறைவேற்ற திருட முடிவு செய்து, சம்பவத்தன்று காலை 8.30 மணியளவில் அந்தோணி மேரி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொலை செய்து நகைகளை திருடியதாகவும் சகாயம் அந்தோணி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, சந்தேகம் வராமல் இருக்க அந்தோணிமேரியின் உடல் மீது மிளகாய் பொடிகளை தூவிவிட்டும் சென்றுள்ளார்.
நகையை வைத்து பணம்
தொடர்ந்து ராயபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் திருடிய நகையை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துவிட்டு அதில் 40 ஆயிரம் ரூபாயை மனைவிக்கு அனுப்பி வைத்துவிட்டு மீதமுள்ள பணத்தை தான் வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை அடுத்து சகாயம் அந்தோணியிடமிருந்து 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டி கொலை - 6 சவரன் நகை கொள்ளை