முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனரும், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ் கூறுகையில், “முக்குலத்தோர் சமூகத்தினர் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவதூறு செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் சிலர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இதுபோன்ற பதிவுகள் குறித்து காவல்துறை ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளியிடம் புகார் அளித்துள்ளேன்.
குறிப்பாக தஞ்சாவூர், நாகை, ராமநாதபுரம் போன்ற இடங்களில் இந்த பதிவு பரவி வருகிறது. இதை உடனடியாக நீக்கி, பதிவிட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
நான் ஒரு சமூகத்தைச் சார்ந்த இயக்கம் நடத்தி வந்தாலும், அனைத்து மக்களையும் அரவணைத்து தான் செல்கிறேன். சமூகங்களுக்குள் பகைமையை உருவாக்கும் இத்தகையச் செயலில் ஈடுபடுவோர் அனைவரும் சமூக விரோதிகள் தான். எனவே, சமூக வலைதளங்களில் முக்குலத்தோர் சமூகத்தினர் குறித்து அவதூறான செய்திகள் வந்தால் அதை பொது மக்கள் நம்ப வேண்டாம்” என்றார்.
இதையும் படிங்க : சின்னத்திரை படப்பிடிப்பை தொடர நிபந்தனைகளுடன் அனுமதி - முதலமைச்சர் பழனிசாமி