சென்னை: முன்னாள் நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ இன்று (மே.17) காலை முதல் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் பைக்கிராப்ட்ஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் என சென்னையில் மூன்று இடங்களிலும், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா, மும்பை உட்பட ஒன்பது இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை பலமுறை சோதனை நடத்தியது. இந்நிலையில், இந்த முறை கார்த்தி சிரம்பரம் மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டில் முறைகேடு நடத்தப்பட்டதாக 2017 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் 2019 ஆம் ஆண்டு முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். மேலும், வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் சென்னையைச் சேர்ந்த பாஸ்கரராமன் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் தொடர்புடைய இடங்களிலும் அப்போது சிபிஐ சோதனை மேற்கொண்டிருந்தது. ஆடிட்டர் பாஸ்கரராமன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் தான் இந்த புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பஞ்சாப் மாநிலத்தில் Talwandi Sabo power limited என்ற நிறுவனத்திற்கு 250 சீன நாட்டினர் வேலைக்காக அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கார்த்தி சிதம்பரம் உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தார்.
சிபிஐ சோதனை நடைபெறும் நிலையில், ப.சிதம்பரம் டெல்லியிலும், அவரது மனைவி நளினி சிதம்பரம் சோதனை நடைபெற்று வரும் சென்னை வீட்டிலும் உள்ளனர். கார்த்தி சிதம்பரம் குடும்பத்தினருடன் லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை - பின்னணி என்ன?