சென்னை: காவிரி நீதிமன்ற தீர்ப்பை மீறி மோகதது அனைகட்டுவதற்காக கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்து மேகதாது அணை வழக்கை துரிதப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கடந்த ஜூலை 7ஆம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர், மேகேதாது அணை கட்ட ஒன்றிய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற ஒன்றிய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மைப் பணி என்றும், மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்றும் முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
இதற்கு முன்பு மேகேதாது அணை தொடர்பாக ஜூலை 4ஆம் தேதி துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, அணை கட்டுவதற்கு எல்லை அடையாளம் காணும் பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, கர்நாடக வனத்துறை சார்பில், 29 துணை வன அதிகாரிகளை நியமித்து, கூடுதல் முதன்மை தலைமை வனக் காப்பாளர் அனில்குமார் ரதன் உத்தரவு பிறப்பித்து உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம், கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 2018-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை 177.25 டிஎம்சி ஆக குறைத்து உத்தரவிட்டது. ஆனால் இந்த குறைந்த அளவு நீரைக் கூட கர்நாடகா திறந்துவிட மறுக்கிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியும், தமிழ்நாட்டின் மரபு உரிமைக்கு மாறக மோகதாது அணை கட்டுமானப் பணியை கர்நாடக அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மற்றொரு மனு தாக்கல் செய்து மேகேதாது அணை வழக்கை துரிதப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :தெலங்கானாவில் முடிவுக்கு வருகிறது நிலப்பிரபுத்துவ காலத்திய VRA முறை - முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அதிரடி!