சென்னை மெரினா கடற்கரையில் திருவள்ளூவர், பாரதியார், பாரதிதாசன், கண்ணகி உள்பட பல்வேறு சிலைகள் நிறுவப்பட்டு மாநகராட்சி துறையினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1968 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது மெரினாவில் கண்ணகி சிலை நிறுவப்பட்டது.
பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு இந்த கண்ணகி சிலையை இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. திமுக ஆட்சியில் மறுபடியும் அதே இடத்தில் கண்ணகி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு திடீரென கண்ணகி சிலையின் மேடையிலிருந்த சிமெண்ட் மற்றும் மார்பிள் கற்கள் முற்றிலுமாக உடைந்து கிடந்தது. இது குறித்து தகவலறிந்த அண்ணா சதுக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து, அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து யாரேனும் இந்த சிலையை சேதப்படுத்தினரா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நிவர் புயல் காரணமாக அடித்த காற்றினால் கண்ணகி சிலை சேதமடைந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலர்கள் சிலையை பார்வையிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெரியார் சிலையை உடைப்பேன் என வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டவர் கைது!