தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக எம்.பி., கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர்கள் சந்தானகுமார், முத்துராமலிங்கம் ஆகியோர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
'வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். சந்தானகுமார் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து கனிமொழி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவுக்குப் பதிலளிக்க சந்தானகுமாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், வழக்கு தொடர்பாக கனிமொழி தன்னுடைய எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: சென்னையில் 12 டன் நெகிழி பறிமுதல்!