சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் காலியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்குப் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தியது. இதில் திமுக - காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்பட 77 பேர் இறுதி வேட்பாளர்களாகக் களம் கண்டனர்.
இந்த இடைத்தேர்தல் முடிவில் திமுக - காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை விட 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்தித்தார், மேலும் மத்திய தலைவர்களை அவ்வப்போது சந்தித்து வருகிறார். அந்த வகையில் டெல்லியில் தலைவர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று மாலை சென்னைக்குத் திரும்பி உள்ளார். சென்னைக்குத் திரும்பியதும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவமனையில் சந்தித்த பிறகு காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சிவராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இளங்கோவன் அவர்கள் ஈரோடு வெற்றிக்குப் பிறகு டெல்லிக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்து விட்டு 4:30 மணியளவில் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த தகவல் அறிந்து நாங்கள் அவரைக் காண வந்தபோது அவர் மிகவும் நன்றாக இருக்கிறார், நாளை அல்லது நாளை மறுநாள் வீடு திரும்பி விடுவார் என மருத்துவர்கள் கூறினர். இந்த நேரத்தில் எதற்கு என்னை சந்திக்க வந்து உள்ளீர்கள்..? உங்களுடைய உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என எங்களிடமும் மற்ற நிர்வாகிகளிடமும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்" என சிவராமன் தெரிவித்தார்.
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது, இந்நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருடைய தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வந்து பின்னர் அவர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.