சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட சரகத்திற்குட்பட்ட டாஸ்மாக் கடை எண் 4109 இல் விற்பனையாளர்களாகப் பணிபுரிந்து வந்த எல். துளசிதாஸ், எம். ராமு ஆகியோர், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். இதில் விற்பனையாளர் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராமு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த விற்பனையாளர் துளசிதாஸ் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், இச்சம்பவத்திற்கு காரணமான நபர்களை துரிதமாகச் செயல்பட்டு கண்டுபிடிக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்க உத்தரவு
இதுபோன்ற தாக்குதல் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த விற்பனையாளர் துளசிதாஸ் மாற்றுத் திறனாளி என்பதை அறிந்த முதலமைச்சர், துளசிதாஸ் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கிடவும், அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு துளசிதாஸின் மனைவி சுமதிக்கு அவரின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் உரிய பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராமுவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடை விற்பனையாளர் வெட்டிப்படுகொலை!