சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அந்த விழாவில் பல்வேறு துறையில் சாதித்த பெண்களுக்கு கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார்.
பின்னர், விழாவில் கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தி ஒழிக என்பது என்னுடைய கோஷம் இல்லை. தமிழ் வாழ்க என்பது தான் என்னுடைய கோஷம். பெண்களின் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். ஆண்களுக்கு சொன்னால் அதைப் புரிந்து கொள்வார்கள். எங்கள் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
நல்லதை காப்பி அடிப்பதில் நல்லத்தனம் வேண்டும். எல்லோரும் லைட் போடுவார்கள், அந்த ஒளியில் அனைவரும் நனையட்டும். ஆனால் பல்பு கண்டுபிடித்தது நாங்கள் தான். அரசியலை நான் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்த 40 வருடத்தில் போஸ்டர் ஒட்டும் பெண்களை நான் பார்த்தது இல்லை.
ஆனால் போஸ்டர் ஒட்டும் பெண்களை இப்போது பார்க்கிறேன். நாய், நரிகள் வராமல் இருக்க வீட்டு வாசலில் ஃபோர்டு தொங்க விட வேண்டும் என ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஓட்டுக்கு காசு கொடுத்து தன் வசப்படுத்த நினைப்பவர்களை இன்னும் அசிங்கமாக தான் திட்ட வேண்டும்.
ஆனால் மேடை நாகரீகம் கருதி அதை செய்ய முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை நான் சொன்னேன். ஆனால் தற்போது தான் அவர்களுக்கு புரிந்துள்ளது.
நான் நினைத்தது 4000 ரூபாய், ஆனால் அதில் 3000 ரூபாய் எடுத்துவிட்டு 1000 ரூபாய் மட்டும் அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் காப்பி அடிக்கிறார்கள் நாங்கள் அனைத்தையும் செயல்படுத்துவோம். என்னுடைய பரப்புரையை இடைநிறுத்தம் வேண்டும் என்றே அவ்வப்போது எங்கு சென்றாலும் ஆம்புலன்ஸ் வாகனத்தை இடையில் அனுப்புகிறார்கள்.
பிரியாணி கொடுத்து வந்த கூட்டம் ஆம்புலன்ஸ் வந்தால் கலையும், ஆனால் எவ்வளவு ஆம்புலன்ஸ் வந்தாலும் எங்கள் கூட்டம் ஒதுங்கும்; ஒருபோதும் கலையாது. எல்லாவற்றிக்கும் காசு தேவை. ஆனால் அதை தனி நபர்கள் எடுத்துக்கொள்ள கூடாது.
நான் வேறு வீல் சேரை பற்றி பேசினேன். கலைஞரை நான் கூறவில்லை. கருணாநிதியை அசிங்கப்படுத்த நினைத்தால் ஸ்டாலின் என்று கூறினாலே போதுமானது. திருடி விட்டு ஓடிய திருடன் நின்று கூப்பிட்டீர்களா என்று கேட்க கூடாது. ஆனால் அப்படி கேற்கும் நிலை இப்போது வந்துள்ளது.
சாக்கடையையும் நதியையும் கவனிக்காமல் விட்டால் நாசமாய் போய் விடும். இலக்குகளை அடைவது தான் எங்கள் வெற்றி. இரண்டு தலைவர்களை இழந்து விட்டோம், இனி எந்தத் தலைவரையும் இழக்கக் கூடாது. நான் படித்த புத்தகத்தில் பெண்மை தான் மிகவும் பிடித்தது.
காவல் படையை ஏவல் படையாய் வைக்க கூடாது. சட்டங்களை வலுபடுத்துவோம். உலகில் நடந்த அனைத்து புரட்சிகளிலும் பெண்களின் பங்கு இருந்துள்ளது. இதை சொன்னால் காப்பி அடித்துவிடுவார்களே என்ற பயம் இல்லை(ஸ்டாலினை மறைமுகமாக சாடிய கமல்), பெண்களின் நலன் பற்றி நிறைய திட்டங்கள் இருக்கின்றது. சொன்னால் அவர்கள் காபி தான் அடிப்பார்கள். ஆனால் நாங்கள் தான் நிறைவேற்றுவோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், எங்கள் இலக்கில் வெற்றி காண்பதே எங்கள் வெற்றி" எனப் பேசினார்.
இதையும் படிங்க: தனிமனித தாக்குதல் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது - கமல்ஹாசன்