சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல், இன்று மாலை தீவுத்திடலில் இருந்து தேமுதிக தலைமை அலுவலகம் கொண்டு வரப்பட்டு, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
முன்னதாக, நடிகர் கமலஹாசன் விஜயகாந்த் உடலிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில், “எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை ஒரே மனிதருக்கு மட்டுமே சொல்லலாம் என்றால், அது விஜயகாந்திற்கு மட்டும்தான் பொருந்தும். நட்சத்திர அந்தஸ்து வருவதுக்கு முன்னர் என்னிடம் எப்படி பழகினாரோ, அப்படித்தான் இவ்வளவு உயரம் வந்த பிறகும் பழகினார்.
இவரிடம் எனக்கு பிடித்தது என்னவென்றால், விஜயகாந்த்திடம் எந்த அளவுக்கு பணிவு உள்ளதோ, அந்த அளவுக்கு நியாயமான கோபமும் வரும். அந்த கோபத்தின் ரசிகன் நான். அதனால்தான் அவர் மக்கள் பணிக்கு வந்தார் என்றே நான் நினைக்கிறேன். இப்பபடிப்பட்ட நேர்மையானவரை இழந்திருப்பது ஒருவகை தனிமைதான். நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டுச் செல்கிறேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: “விஜயகாந்த்தை பார்க்க வந்தவர்கள்தான் என்னைப் பார்த்தனர்”.. விஜய்யின் வளர்ச்சிக்கு கேப்டன் காரணமா?